கடலூரில் பரபரப்பு : ஒரே நேரத்தில் பற்றி எரிந்த 8 படகுகள்.!
eight boats damage for fire accident in cuddalore
கடலூர் மாவட்டத்தில் துறைமுகம் அருகே அக்கரை கோரி பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள். இந்நிலையில் மீனவர்கள் நேற்று வழக்கம் போல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்திலேயே படகுகள் அனைத்தும் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடிவந்து படகுகளை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், எட்டு பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை சேதமானது.
இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறைமுகம் போலீசார் தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் மர்மநபர்கள் படகுகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? தீ வைத்ததற்கு என்ன காரணம்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நிறுத்தியிருந்த படகுகளை இதே போல் மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்று சம்பவம் நடந்துள்ளது மீனவர்கள் இடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
eight boats damage for fire accident in cuddalore