தேர்வு நேரத்தில் தடையில்லா மின்விநியோகம் செய்யப்பட வேண்டும் - மின்வாரியம் உத்தரவு.!
electricity board order continue power supply for exam time
தமிழ்நாடு மின்சார வாரியம் கோடை காலம், பட்ஜெட் கூட்டத் தொடர்,பொதுத்தேர்வு போன்றவற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் தலைமையாசிரியர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில் துறை சார்ந்த பணியாளர், அதிகாரிகளின் எண்களை அவர்களிடம் வழங்க வேண்டும். தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது.
மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது. இவ்வாறான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடர்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
electricity board order continue power supply for exam time