'டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை; யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை'; அமலாக்கத்துறை..!
Enforcement Department says that officials were not harassed during the raid
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. இது சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜேசேகர் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அமலாக்கத் துறை தரப்பில், "டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை என்றும், ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே மூன்று நாட்களும் தங்க வைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நள்ளிரவில் பெண் அதிகாரிகள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றும், பாதுகாப்பு கருதி அவர்கள் முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளுக்கோ, அலுவலக உடைமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும், குறித்த சோதனை நடவடிக்கையின் போது, அமலாக்கத் துறை பெண் அதிகாரிகள் இருந்ததாகவும், சோதனையின் போது அதிகாரிகள் யாரும் துன்புறுத்தப்படவில்லை எனவும், அவ்வாறு துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திடீர் சோதனை எதற்காக என டாஸ்மாக் தலைவர், மேலாளருக்கு தெரியப்படுத்திய பிறகே சோதனை நடைபெற்றதாகவும், அனைவருக்கும் உணவு மற்றும் போதிய ஓய்வு அளிக்கப்பட்டதாகவும், சோதனையின் போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமலாக்கத் துறை வாதங்கள் முடிந்துள்ள நிலையில், டாஸ்மாக் தரப்பு பதில் வாதம் வைக்கவுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
English Summary
Enforcement Department says that officials were not harassed during the raid