கள்ளச்சாராய விற்பனையை அரசே ஊக்குவிப்பதா? - அமைச்சரின் பேச்சுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்.!
ex cm o panneerselvam condomes to minister duraimurugan speech
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் 'கிக்' இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசியுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்து இருப்பதாவது:-
"கள்ளச்சாராய விற்பனை, கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் சாதனைகள். இவற்றைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை என்பது ஆளும் கட்சியினரின் ஆசியோடு நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், ஆளும் கட்சியினர் மீது அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டின.
அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நிரூபிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி இருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் தன்னுடைய உரையில், "உழைப்பவர்கள் தங்கள் அசதிக்காக மது குடிக்கின்றனர் என்றும்; டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் 'கிக்' இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர் என்றும்; கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றும்; மனிதர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றும் கூறி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அதாவது, கள்ளச்சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொன்னாலே, கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக அமைச்சரே தெரிவிப்பது, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும்.
அரசே இதை ஊக்குவிப்பது போல் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு, அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ex cm o panneerselvam condomes to minister duraimurugan speech