டி.என்.பி.எஸ்.சி  தொகுதி -2  பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது - மருத்துவர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி  தொகுதி -2  பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது: உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-

தமிழக அரசுத் துறைகளுக்கு துணை வணிகவரி அதிகாரி,  சார்பதிவாளர், வனவர், பல்வேறு துறைகளுக்கான  உதவியாளர்கள் என மொத்தம்  61 வகையான பணிகளில் காலியாக உள்ள 2327  இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான  தொகுதி 2/ 2ஏ தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.  இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில்  பல பணிகளுக்கு இதுவரையில்லாத வகையில்  வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தொகுதி  2/2ஏ பணிகளுக்கு  இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓராண்டு பணிக்காலம்  இருக்கும் வகையில் 59 வரை  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், நடப்பாண்டுக்கான  அறிவிக்கையில்   இரண்டாம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட 13 பணிகளில்   துணை வணிகவரி அதிகாரி,  சார்பதிவாளர், வனவர், நன்னடத்தை அலுவலர் ஆகிய  பணிகளுக்கு அதிகபட்ச வயது 37 வயது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஒட்டுமொத்தமாக  அறிவிக்கப்பட்டுள்ள 2327  பணியிடங்களில்   446 பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொகுதி 2 தேர்வுகளைப் பொறுத்தவரை  இந்த பணிகளுக்கான காலியிடங்கள் தான் அதிகமாக இருக்கும்.  அதனால், இந்த பணிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள்  விண்ணப்பம் செய்வார்கள்.  ஆனால், திடீரென  வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால்  இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் 37 வயதைக் கடந்த எவரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து விட்டு காத்திருக்கும்  இளைஞர்களுக்கு இது  பெரும் ஏமாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது ஆகும்.

இதற்கு முன் கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான  தொகுதி 2/2ஏ பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 23.02.2022-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதில் எந்தப் பணிக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், அதன்பின்  இரு ஆண்டுகள்  கழித்து அறிவிக்கப்பட்டிருக்கும்  நடப்பாண்டிற்கான  தொகுதி 2/2ஏ பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையில் புதிதாக  வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்?   சமூகநீதி  சார்ந்த இந்த விஷயத்தில்  கொள்கை முடிவை அரசு எடுத்ததா?  அதிகாரிகள்  எடுத்தார்களா? என்பது குறித்து  அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஆள்தேர்வு அறிவிக்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு குறித்த  4.1.2.2 பிரிவு   தெளிவாக இல்லை.  4.1.1.2 பிரிவில் இடம் பெற்ற விவரங்களை அரையும் குறையுமாக திருத்தி வெளியிட்டது போன்று  தோன்றுகிறது.  அரசியல் சட்ட அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும்  ஆள்தேர்வு அறிவிக்கைகள் இந்த அளவுக்கு  குளறுபடிகளுடன் வெளியிடப்படுவதை நியாயப்படுத்த  முடியாது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2/2ஏ பணிகளுக்கு  அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திரும்பப் பெற வேண்டும்.  இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது  வரம்பு குறித்த விவரங்களுடன் தெளிவான அறிவிக்கையை புதிதாக வெளியிட வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fixing age limit for TNPSC Block 2 posts is against social justice Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->