சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்! தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!
GKVasan statement on property tax hike
தமிழக அரசு, தற்போது உயர்த்தியிருக்கும் சொத்து வரி மக்களைப் பாதிக்கும் என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசு நேற்றிரவு திடீரென சொத்து வரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இதில் 150 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன், இந்த சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.
அதாவது தமிழக அரசு, சொத்து வரி விகிதங்களை 25 % முதல் 150 % வரை அறிவித்துள்ளது. குறிப்பாக 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
சொத்து வரி உயர்வால் சொத்து வைத்திருப்பவர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக கொரோனா காலப்பாதிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த சொத்து வரி உயர்வானது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.
சொத்து வரியில் பல ஆண்டுகளாக எவ்வித உயர்வும் இல்லை என்றாலும் கூட தற்போதைய மக்களின் பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டு சொத்து வரியை உயர்த்த எடுத்த முடிவு சரியானதல்ல.
சொத்து வரி உயர்வால் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் சொத்து வரியை உயர்த்தாமல், மாற்றுத்திட்டத்தின் மூலம் வருவாயைப் பெருக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
எனவே தமிழக அரசு, தற்போது உயர்த்தியிருக்கும் சொத்து வரியானது மக்களை பாதிக்கும் என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
GKVasan statement on property tax hike