திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க அரசாணை வெளியீடு.!
government order issued trichy kalaingar librery
கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதனை தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது.
இந்த நிலையில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்காக ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது:-
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 'காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்' என்று அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு முதலமைச்சர் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார்.
திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
English Summary
government order issued trichy kalaingar librery