சனாதன எதிர்ப்பு || 2 சுற்றறிக்கையும் வாபஸ் பெறுவதாக 3வது சுற்றறிக்கை! திரு.வி.க அரசு கல்லூரியின் கூத்து!
Govt college circulars regarding sanatana have been withdrawn
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறும் கருத்தரங்கில் திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சனாதன எதிர்ப்பு குறித்து தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் சார்பில் திரு.வி.க அரசு கல்லூரி முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றி தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை காட்டூரில் நடைபெறும் கலைஞர் கோட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனைத்து துறை தலைவர்களுக்கும் கல்லூரி முதல்வர் ராஜராமன் சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்த சுற்றறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாஜக தலைப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கல்லூரி முதல்வர் சார்பில் மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் கல்லூரி மாணவிகள் தங்களின் விருப்பப்படி சனாதனம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என 2து சுற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் கல்லூரி முதல்வர் சார்பில் 3வது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் "திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ராஜராமன் அவர்களால் 12.09.2023 மற்றும் 13.09.2023 ஆகிய தினங்களில் அனுப்பப்பட்ட சனாதனம் கருத்தரங்கு குறித்து சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்படுகிறது" என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 2ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதிலிருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Govt college circulars regarding sanatana have been withdrawn