அச்சுறுத்தும் புயல் - சென்னையில் நெருங்கும் தீவிர மழை கொடுக்கும் மேகங்கள்.!
heavy rain clouds in chennai
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் புயலாக உருவாகியுள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது இந்தப் புயல் திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த ஃபெங்கல் புயல் எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் இரண்டு தாலுகாக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஃபெங்கல் புயல் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
heavy rain clouds in chennai