3-வது நாளாக இடைவிடாமல் கொட்டும் கனமழை... கடலுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிய மீனவர்கள்! - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்டங்களில்  3-வது நாளாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில்  தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை இன்றும் நீடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதி கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அடைமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் ஒரே நாளில் 1731.40 மி.மீ.அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196.40 மி.மீ. மழை கொட்டியுள்ளது. மஞ்சளாறில் 191 மி.மீ., கும்பகோணத்தில் 179 மி.மீ, கீாணை-168 மி.மீ, பாபநாசம்-124.20 மி.மீ, அய்யம்பேட்டை-124 மி.மீ, பூதலூர்-115, திருக்காட்டுபள்ளி-85.20, திருவையாறில் 78 மி.மீ, தஞ்சாவூரில்-35 மி.மீ. மழையும் பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஃபெஞ்ஜல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இடைவிடாது பெய்யும் மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

தொடர்மழையால் இன்றும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதைப்போல் நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8.2செமீ மழை பதிவாகியுள்ளது.மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.இதைப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Heavy rain continues for 3rd day Fishermen stranded at home without venturing out to sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->