ஹிஜாப் அணிந்த பெண் இந்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் பரபரப்பு.!
Hijab student not allowed in exam thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா சார்பில் 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த தேர்வினை எழுத வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வை எழுத திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் அரபி ஆசிரியையாக பணி புரிந்து வந்த முஸ்லிம் இளம்பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார்.
அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்தபோது தேர்வரைரைக்குள் வந்த மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு எழுதக்கூடாது என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளம் பெண் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தேர்வறையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் இளம் பெண்ணிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்றும் இல்லையென்றால் வெளியே சென்று விடுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண்ணை தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த எஸ்டிபிஐ மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் தேர்வு எழுத மதிய நேரம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தேர்வு எழுதாமல் திரும்ப சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Hijab student not allowed in exam thiruvannamalai