#சென்னை || திடீரென இடிந்த வீடு! அலறி அடித்து ஓடி மக்கள்! நள்ளிரவில் திடீர் பதற்றம்!
house was damaged due to metro machine collided in Chennai
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணியானது அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியின் போது தூண் அமைப்பதற்காக இயக்கப்பட்ட ராட்சத இயந்திரம் மோதியது.
ராட்சத இயந்திரம் மோதியதில் வீடு குலுங்கி மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறி விழுந்தது. சென்னையில் பூகம்பம் வந்து விட்டதோ என பதற்றத்தில் பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
பிறகு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் மோதி வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை விழுந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடமைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
பார்த்திபநாதன் வீடு இடிந்து விழுந்ததை உணர்ந்த மற்ற குடியிருப்பு வாசிகளும் பூகம்பம் வந்ததாக நினைத்து வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மெட்ரோ பணி மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் உயரமான இயந்திரத்தை கையாண்ட ஆபரேட்டர் வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. சேதமடைந்த வீட்டை சரி செய்து தருவதாக மெட்ரோ மேலாளர் உறுதி அளித்தார்.
அதை ஏற்க மறுத்த குடியிருப்பு வாசிகள் மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது. ரெட்டேரி பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதே இத்தகைய விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
house was damaged due to metro machine collided in Chennai