சான்றிதழ் வாங்க காவல் நிலையங்களுக்கு படையெடுக்கும் கோவில் ஊழியர்கள்.!
HRCE Letter to Temple
தமிழக கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் மீது எந்தவித குற்ற வழக்குகளும் இல்லை என்ற சான்றிதழ் வாங்க காவல்நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. இவற்றில் பணி புரியும் ஊழியர்கள் தங்கள் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என காவல் நிலையங்களில் சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு அனைத்து கோவில் நிர்வாகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்து சமய அற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் குருக்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் தாங்கள் வசிக்குக் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து தங்கள் மீது எந்தவிதமான வழக்கோ, குற்றப் பின்னணியோ இல்லை என சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாமல், குருக்கள் மற்றும் பட்டாச்சாரியார்களும் இந்த சான்றிதழை வாங்க காவல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். அனைத்து கோவில்களிலும் இருந்தும் காவல் நிலையங்களுக்கு சான்றிதழ் வாங்கும் பணியில் ஊழியர்கள், குருக்கள் மற்றும் பட்டாச்சாரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.