காதல் மனைவியை எரித்துக்கொன்ற கணவர்...தென்காசி அருகே அதிர்ச்சி!
Husband kills wife Shock near Tenkasi!
தென்காசி அருகே காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
அப்போது அந்த பெண்ணின் காலில் மெட்டி இருந்தது.மேலும் இடது கை, காலில் உள்ள 5 விரல் எரியாமல் கிடந்தது. அப்போது சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் இருந்து உள்ளன. மேலும் இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதையடுத்து தனிப்படை போலீசார் இலத்தூர் முதல் இனாவிலக்கு வரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.அப்போது தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த ஜான்கில்பர்ட் என்பவரை போலீசார் பிடித்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று எரித்தது தெரியவந்தது.
இவர் அதே பகுதியை சேர்ந்த 30 வயதான கமலி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்போது இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜான்கில்பர்ட் தனது காதலியை கரம்பிடித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது .
அப்போது கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இடையே நடந்த தகராறில் ஜான்கில்பர்ட் தனது மனைவியை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ஒருவரின் உதவியை நாடி உள்ளார் என்றும் அதன்படி, மனைவியின் உடலை ஒரு காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக தென்காசி அருகே சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Husband kills wife Shock near Tenkasi!