#திருச்சி | தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்து மாணவர்கள் காயம்..!
In a private school Samiana pandal collapsed and students were injured in Trichy
திருச்சியில் தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்
திருச்சி மாவட்டம் கருமண்டபம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் விழா நடைபெற்ற கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியதால் சாமியானா பந்தல் சரிந்து விழுந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும் ஆசிரியர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்பு தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
English Summary
In a private school Samiana pandal collapsed and students were injured in Trichy