இனி "இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே".. இந்திய ராணுவத்திற்கு ஆன்-லைன் பொது நுழைவு தேர்வு..!!
Indian army recruitment online Exam in hindi english only
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் முறையில் பொது நுழைவுத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்று ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு பணிகள் இயக்குநர் எம்.கே.பாத்ரே தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணி மூன்று கட்டங்களாக நடத்தப்படும். கடந்த ஆண்டு வரை ஆள்சேர்ப்பு பணி உடல் தகுதித் தேர்வு, அதனைத் தொடர்ந்து மருத்துவத் தேர்வு நடத்தப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் என்று இருந்தது.
ஆனால் தற்போது முதல் கட்டமாக ஆன்-லைனில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு 2-ம் கட்டமாக ஆள்சேர்ப்பு பணிக்கு அழைக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தில் அவர்கள் உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதற்கு தகுதி பெற்றவர்கள் மருத்துவ பரிசோதனையான 3-ம் கட்டத்திற்கு செல்வார்கள். ஆன்லைன் சி.இ.இ. மற்றும் உடல்நிலைத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஆன்-லைன் தேர்வுக்கான பதிவுகள் பிப். 16-ம் தேதி தொடங்கிய நிலையில் முதல் மார்ச் 15-ம் தேதி முடிவடையும்.
தேர்வர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ராணுவத்தில் சேர பதிவு செய்யலாம். பதிவு முடிந்த ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 17-ம் தேதி ஆன்-லைன் தேர்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்வு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் பல விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆன்-லைன் நுழைவுத் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Indian army recruitment online Exam in hindi english only