நிதியில்லாமல் தள்ளாடுகிறதா தமிழக அரசு.? மேட்டூர் அணை தூர்வாரும் பணி கைவிட முடிவு.? வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேட்டூர் அணை சமீபத்தில் தனது 90வது வயதை எட்டியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் பிற்காலத்தில் அது மேட்டூர் அணை என பொதுமக்கள் மத்தியில் பிரபலமானது.

மேட்டூர் அணையானது 60 சதுர மைல் பரப்பளவில் 93.5 டிஎம்சி நீரை 120 அடி வரை தேக்கி வைக்கும் கொள்ளளவில் தற்போது இருந்து வருகிறது. தமிழகத்தில் பருவ மழை காலத்தின் போது அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 500 டிஎம்சி வங்கக் கடலில் கலக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் நிதி உதவியோடு விவசாயிகளே மேட்டூர் அணையில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் ஒரு லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க அப்போதைய அதிமுக அரசு அனுமதி வழங்கியது.

விவசாய பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் நன்செய் நிலத்துக்கு 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் (25 டிராக்டர்), புன்செய் நிலத்துக்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) எடுத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அணையில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுப்பதாக குற்றம் சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை பிடித்த திமுக மேட்டூர் அணை தூர்வாதுவதற்கான சாத்தியக்கூறிகளை ஆராய்ந்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 3000 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணையின் கொள்ளளவை 120 டி.எம்.சியாக அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மேட்டூர் அணை தூர்வாரும் திட்டம் தற்போது கைவிடும் சூழல் உருவாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 93 டிஎம்சி அடி தண்ணீரைக் கொண்ட மாநிலத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையை 3,000 கோடி செலவில் அணையை தூர்வாருவதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 30 டிஎம்சி அடி நீர் தேக்க திறனை அதிகரிக்க முடியும் என நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் மேட்டூர் அணையில் 120 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து அள்ளப்படும் மணலை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். ஆனால் தற்பொழுது தமிழக அரசு நிதி சவால்களை எதிர்கொண்டுள்ளதால் மேட்டூர் அணை தூர்வாரும் இந்த முன்மொழிவில் ஆர்வம் காட்டவில்லை.

அதேபோன்று பவானிசாகர், அமராவதி மற்றும் சாத்தனூர் போன்ற அணைகளையும் ஆய்வு செய்து அவற்றின் கொள்ளளவை அதிகரிக்க ஒரு திட்டத்தை நிபுணர் குழுவானது முன்வைத்துள்ளது. சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தரப்பில் தூர்வாருவதற்கு நிதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

தமிழக அரசு அணைகளை தூர்வார உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கும் இனி சாத்தியமில்லை. இதற்கு காரணம் தமிழக அரசு உலக வங்கியிடமிருந்து நேரடியாக கடன் பெறும் வரம்பை ஏற்கனவே எட்டிவிட்டது. இது குறித்து நீர்வளத் துறை தரப்பு கூறுகையில் "தற்போது தமிழக அரசு நிதிநிலை சரியில்லாததால் ​ வண்டல் மண் அகற்றும் திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் மணல் அள்ளுவதற்கு போதிய இட வசதியும் இல்லை. இதுகுறித்து அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்காததால் கர்நாடக அரசிடம் கையேந்தும் நிலையில் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. 

ஆனால் கர்நாடக அரசு தரப்பு தமிழகத்திற்கு திறந்து விடும் நீரை உரிய வகையில் பயன்படுத்தாமல் கடலில் வீணாக திறந்து விடப்படுவதாக தமிழக அரசின் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகமும் பயன்பெறும் எனவும் கர்நாடக அரசு தரப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. 

மேகதாதுவில் அணைக்கட்ட முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ள கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்து உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை தூர்வாரும் பணியும் நிதி சுமையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info TNgovt put hold on mettur dam dredging project due to lack of funds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->