மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்புகள் தோல்வி - ஜவாஹிருல்லா!
Jawahirullah Condemn to central Govt 2023
"மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்புகள் தோல்வி அடைந்துவிட்டதையே, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் காட்டுகிறது" என்று, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ரும், எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப் படகில் தோப்புத்துறைக்குக் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். காயமடைந்துள்ள தமிழக மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்மையில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கையில் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பிய சில நாட்களுக்குள் இதுபோன்ற சம்பவம் நடந்தேறி இருப்பது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்புகள் தோல்வி அடைந்திருப்பதைக் காட்டுகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதனை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. கர்நாடக எல்லையில் வனத்துறையினரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
தமிழக மீனவர்கள் தங்களது உயிரையும் உடமையையும் தொடர்ந்து இழந்து வருகிறார்கள். எனவே, தமிழர்கள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
English Summary
Jawahirullah Condemn to central Govt 2023