அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க. தவம் இருக்கிறது - பரபரப்பை கிளப்பிய கடம்பூர் ராஜு.!
kadambur raju speech about bjp in thoothukudi meeting
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலும், இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெருமாள், சின்னப்பன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-
"இன்னும் 10 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிமிடம் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க. தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர். அ.தி.மு.க. பலமாக இருப்பதால் தான் பா.ஜ.க. நம்மை தேடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் 2 கட்சிகள் அதிருப்தியில் உள்ளது. தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை இந்த முறை அ.தி.மு.க. தான் களமிறங்குகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய வேட்பாளரை பொதுச்செயலாளர் தேர்வு செய்துவிட்டார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அ.தி.மு.க. தான் முழுகாரணம். நிலத்தினை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. தான். இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டதை மக்களிடம் தெரிவித்தால் போதும். மோடியை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் வாக்களிக்கமாட்டார்கள். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது" என்று பேசியுள்ளார்.
English Summary
kadambur raju speech about bjp in thoothukudi meeting