அடடேய்! தமிழக அரசு பங்களாவை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்த கொடுமை!
Kallakurichi Sub Register issue
கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உதவி ஆட்சியர் பங்களாவை தனி நபர் ஒருவரின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த சம்பவம் அதிரவைத்துள்ளது. இந்த சமபவத்தில் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய சட்ட திருத்தத்தின்படி, போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு, வக்பு வாரியம், இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலங்களை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சொத்து விற்பனை பத்திரம் பதிவான மதிப்பில் சந்தேகம் வந்ததால் துணை ஆட்சியர் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது, பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உதவி ஆட்சியர் பங்களா என தெரிய வந்தது.
உடனடியாக இதுகுறித்து துணை ஆட்சியர் பதிவு துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவே, பத்திரத்தை பதிவு செய்த (பொறுப்பு) சார்பதிவாளர் கதிரவனை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பங்களாவையே போலியாக தனி நபருக்கு பதிவு செய்த அவலம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kallakurichi Sub Register issue