இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த கள்ளழகர்.!!
kallazhagar in vaigai river
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13-ஆம் தேதிக்கு திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளழகர் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு கள்ளழகர் வந்தார். பின்னர் இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர், தங்க குதிரையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை 6.20 மணி அளவில் பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளியதால் அதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தண்ணீரை பீய்ச்சி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
English Summary
kallazhagar in vaigai river