தூய்மைப் பணியாளர்களை கழிப்பறைக்கு தங்க வைப்பதா? இதன் சமூகநீதி ஆட்சியா? கொந்தளித்த அன்புமணி!
Keeping the cleaners in the toilets by Anbumani
கழிப்பறைக்கு தங்க வைக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள்: இதுவா திமுக அரசின் சமூக நீதி? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுக்கழிப்பறைகளை பராமரிப்பதற்காக அழைத்து வரப்பட்ட வெளிமாநிலத் தூய்மைப் பணியாளர்களை, ஒரு மாதத்திற்கும் மேலாக திருப்பூரில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறைக்குள் தங்க வைத்திருந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளதாவது, ஏராளமானோர் பயன்படுத்தும் கழிப்பறைக்குள் தங்கியபடியே அந்த தூய்மைப்பணியாளர்கள் சமைத்து, உண்டு, உறங்கி வந்திருக்கின்றனர் என்ற செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் கடமை ஆகும். ஆனால், வாழத்தகுதியற்ற, நாற்றம் வீசக்கூடிய அறையில் அவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அரசும், மாநகராட்சியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. தொழிலாளர்கள் மிக அவலமான சூழலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காணொலி வெளியாகி வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், பழியை ஒப்பந்தக்காரர் மீது போட்டு அரசும், மாநகராட்சியும் தப்பிக்கப்பார்க்கின்றன. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்காக, தூய்மைப் பணிகளை ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர் வேறு இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருந்ததாகவும், ஆனால், தொழிலாளர்கள் தவறுதலாக கழிப்பறைக்குள் தங்கி விட்டதாகவும் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கூறியிருக்கிறார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதாகத் தான் பொருள். இதுபோன்ற அபத்தமான விளக்கங்களின் மூலம் உண்மையை மறைத்து விட முடியாது.
தமிழ்நாட்டில் தூய்மைப் பணிகள் தொடங்கி, ஓட்டுனர், நடத்துனர் பணிகள், அரசு அலுவலகங்களில் எழுத்தர் பணிகள் வரை அனைத்தும் குத்தகை முறையில் ஒப்பந்தம் விடப்படுகின்றன. குத்தகை முறையில் பணியமர்த்தப்படுபவர்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுவார்கள்; அதை அரசும், அதன் அமைப்புகளும் எவ்வாறு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்? என்பதற்கு இதுதான் மிக மோசமான எடுத்துக் காட்டு.
அனைவருக்கும் சமூகநீதி வழங்கப்படுகிறது; அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன என்றெல்லாம் மூச்சுக்கு முன்னூறு முறை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது திமுக அரசு. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்களை கழிப்பறையில் தங்க வைத்திருக்கிறது திமுக அரசு. இதுவா சமூகநீதி? மிகக் கொடுமையான இந்த குற்றத்தில் ஒப்பந்ததாரரின் மீது பழியைப் போட்டு அரசு நிர்வாகம் தப்பிவிடக் கூடாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டும். அரசுத் துறைகளில் குத்தகை முறை தொழிலாளர் நியமனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நிலையான தொழிலாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary
Keeping the cleaners in the toilets by Anbumani