திறப்பு விழா காணும் கீழடி அருங்காட்சியகம்.. மார்ச் 5ல் முதல்வர் திறந்து வைக்கிறார்..!!
Keezhadi Museum to be inaugurated by CM on March 5
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வு பணியில் தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் பொறித்த பானை, ஓடுகள், கல் மணிகள், வெள்ளி முத்திரை காசுகள், கங்கை நகரத்துடன் தொடர்புடைய கருப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உருக்கு உரைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை அனைத்தும் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்பது கார்பன் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களை மக்களும் மாணவர்களும் காணும் வகையில் அருங்காட்சியம் அமைக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் ரூ.25 கோடி செலவில் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு காட்சி கூடங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை மறுநாள் (மார்ச்-5) நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.
English Summary
Keezhadi Museum to be inaugurated by CM on March 5