முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறது கிளம்பாக்கம் பேருந்து நிலையம்.!
kilambakkam bus stand functional from today
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இந்த நிலையில், இந்த பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறது. இனி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்.
இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு சாதாரண நாட்களில் 300 அரசு விரைவு பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 360 அரசு விரைவு பேருந்துகளும் இயக்கப்படும்.
அதேபோன்று, கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும். கும்பகோணம், சேலம், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட ஆறு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் பெங்களூரு, ஈசிஆர் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
kilambakkam bus stand functional from today