கொடநாடு வழக்கு விசாரணை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
Kodanadu case hearing adjourned to July 28
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு கடந்து ஏப்ரல் மாதம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி அப்துல் காதர் அமர்வின் முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. உதகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் பொழுது கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜரானார்கள்.
மேலும் புலன் விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல வேண்டி உள்ளதாகவும், தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் என ஒத்தி வைத்தார்.
English Summary
Kodanadu case hearing adjourned to July 28