அது குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறை : கோவை மாநகராட்சி நூதன விளக்கம்!
kovai double toilet issue
கோவையில் இரட்டை கழிப்பறை விவகாரம் : குழந்தைகள் உள் சென்று தாழிட்டுக் கொண்டால் பிரச்சினை ஏற்படும் என்பதற்காக, பெரியவர்கள் கண்காணிப்பில் செல்வதற்காக இவ்வாறு கட்டப்பட்டு இருந்ததாக கோவை மாநகராட்சி நூதன விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் (பொ) மரு.மோ.ஷர்மிளா அளித்துள்ள அந்த விளக்க அறிக்கையில், "கோயம்புத்தூர் மாநகராட்சி - வார்டு எண். 66 அம்மன்குளம் பகுதியில் இக்கழிப்பிடம் 1995 ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில். சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.
இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் சிறுவர்கள் உபயோகப்படுத்த இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று மாநகராட்சி ஆணையாளர் (பொ) மரு.மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
English Summary
kovai double toilet issue