ஆளுநருக்கு எதிரான போராட்டம்! புதிய அறிவிப்பை வெளியிட்ட கேஎஸ் அழகிரி!
KS Alagiri Announce 11052023
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கி வைத்து இருக்கிறார். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.
அரசமைப்புச் சட்டப்படி மக்களின் குரலாக ஒலிப்பது சட்டமன்றம் தானே தவிர, ஆளுநரின் ராஜ்பவன் அல்ல. இவர் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் தான்.
இவர் மக்களின் பிரதி நிதியாக ஒருகாலத்திலும் செயல்பட முடியாது. ஆனால், தமிழக அரசுக்கு இணையாக போட்டி அரசு நடத்துவதை போல கற்பனை செய்து கொண்டு ஆளுநர் மாளிகையில் செயல்பட்டு வருகிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள், சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுகிற ஆளுநர் ஒருநாள் கூட அந்த பொறுப்பில் அமர்வது ஜனநாயக விரோதச் செயலாகவே இருக்க முடியும்.
இதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்வாதிகார, சட்டவிரோதப் போக்கை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக நாளை, மாலை 6 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில், மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார்." என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
English Summary
KS Alagiri Announce 11052023