காவல் நிலையம் முன்பு இளம்பெண் தற்கொலை - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!!
madurai high court order thanjavur women sucide case
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்த அய்யாவு என்பவரின் மகன் தினேஷை போலீசார் வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். உடனே தினேஷின் உறவினர்கள் மற்றும் தங்கைகள் மேனகா, கீர்த்திகா உள்ளிட்டோரும் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு சகோதரிகள் இருவரும் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உடனே போலீசார், தினேஷை கைது செய்ததாக கூறியதுடன் மேனகா, கீர்த்திகா உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் திட்டியதனால் மனமுடைந்த இருவரும் காவல் நிலையம் முன்பு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உடனே சகோதரிகள் இருவரும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்ரல் 11-ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் ஆய்வாளர் சர்மிளா உள்பட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் நடுக்காவேரிக்கு சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு இதுதொடர்பான அறிக்கையைத் தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் கீர்த்திகா தற்கொலை விவகாரத்தை நடுக்காவேரி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்து, உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்வது குறித்து மனுதாரர் துர்கா முடிவு செய்ய வேண்டும் என்றும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற கோருவது பற்றி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
English Summary
madurai high court order thanjavur women sucide case