மாணவர்கள் விவரத்தை கேட்பதற்கு மாநில சிறுபான்மை ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது - மதுரை உயர்நீதிமன்ற கிளை.!
madurai high court order to minority commission no ask student admission details
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி செயலாளர், மதுரையில் உள்ள ஒரு பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி செயலாளர் ஆகியோர் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
"கடந்த 2016-2017, 2018-2019ம் கல்வி ஆண்டுகளில் எங்களது கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை அனுப்புமாறு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த ஆணையம் சார்பில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விவரங்களை கேட்பதற்கு அதிகாரம் இல்லை. ஆகவே சிறுபான்மை ஆணைய உறுப்பினர் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்றுத் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி:- "தமிழக சிறுபான்மை ஆணைய சட்டப்பிரிவு 8(1)-ல், நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது, அரசியலமைப்பு சட்டப்படி சிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலும் நடைபெறாமல் கண்காணிப்பது மட்டுமே அந்த ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும்.
இந்த இரண்டையும் தவிர்த்து, மூன்றாவதாக கல்லூரி மாணவர்கள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கப்பட்ட விவரத்தை அந்த ஆணையம் கேட்டுள்ளது. மாணவர்கள் இடஒதுக்கீடு விவரத்தை கேட்பதற்கு மாநில சிறுபான்மை ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே மனுதாரர்களுக்கு, சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் ரத்து செய்யப்படுகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
madurai high court order to minority commission no ask student admission details