காவல் துறைக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.!!
madurai high court question rised to tn police for police association
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி பகுதியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:- "தமிழகத்தில் காவல் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால், காவலர்கள் ஓய்வு இல்லாமல் பணிபுரிய வேண்டியதுள்ளது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, பொதுமக்களிடம் கோபத்தைக் காட்டும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால், காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல், சார்பு-ஆய்வாளர்கள் வரை பதவியில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு 2021-ல் அரசாணை பிறப்பித்தது.

இருப்பினும், இந்த அரசாணை இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. ஆகவே, அரசாணையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என்றுத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் தலைமைக் காவலர்கள், காவலர்கள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் மட்டும்தான் விடுப்பு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். மற்றவர்களுக்கு விடுப்பு தேவையில்லையா? காவல் துறையினருக்கான சங்கங்கள் என்ன செய்கின்றன?’’ என்றுக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘‘நீதிமன்றத்தை அணுகினால், தாங்கள் அடுத்தடுத்து பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும் என்று போலீஸார் அச்சப்படுவதால், யாரும் வழக்குத் தொடரவில்லை. காவல் துறையில் சங்கம் வைக்க அனுமதி இல்லை’’ என்றுத் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘‘தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் சங்கங்கள் இருக்கும்போது, காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை? இது ஜனநாயகத்துக்கு எதிரானது இல்லையா?
கேரளா, கர்நாடகாவில் சங்கங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை? காவல் துறையில் வார விடுமுறைக்கான அரசாணை 2021-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். மாநில முதல்வரின் உத்தரவை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லையா?’’ என்றுக் கேள்வி எழுப்பினார்.
உடனே அரசு தரப்பில், ‘‘மனுதாரர் விளம்பர நோக்கத்துக்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்’’ என்றுத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘‘2021-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இன்றுவரை அமல்படுத்தாமல் இருப்பதை பார்த்தால், விளம்பர நோக்கத்துக்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனக் கூற முடியுமா? மனு தொடர்பாக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்ரல் 23-க்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.
English Summary
madurai high court question rised to tn police for police association