பழைய திட்டங்களை புதியது போல் அறிவிப்பதில் பால்வளத்துறைக்கு நிகர் வேறெந்த துறையும் இல்லை! பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


பழைய திட்டங்களை புதிது போல அறிவிப்பதில் பால்வளத்துறைக்கு இணை வேறெந்த துறையுமில்லை என பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் தேவையறிந்து துறை தோறும் ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களின் நலன் காக்கும் வகையில் ஆண்டு முழுவதும் (365நாட்கள்) கொள்முதல் செய்த பாலை வாங்க அறிவுறுத்தப்படுகிறது எனவும், தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து உறுப்பினர்களின் கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை அரசு நிர்ணயித்த தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்ய அந்தந்த பகுதி கூட்டுறவு சங்க பொதுமேலாளர்கள், துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பானது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ஏனெனில் குழந்தைகள், வயதான பெரியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை பொறுத்தவரை உற்பத்தியோ, கொள்முதலோ,விநியோகமோ அல்லது விற்பனையோ இவை நான்கும் சங்கிலித் தொடர் போல ஆண்டு முழுவதும் (365நாட்கள்) இயங்கிக் கொண்டிருக்கும் துறைகளாகும். 

அதிலும் புயல், கனமழை அதனால் ஏற்படும் பெருவெள்ளம் உள்ளிட்ட எந்த ஒரு இயற்கை பேரிடரோ அல்லது கொரோனா போன்ற நோய் பெருந்தொற்று காலமோ எதுவாகினும் மக்கள் நலனிற்காக அவை தங்குதடையின்றி கண்டிப்பாக செயல்பட்டே ஆக வேண்டும். 

அதுமட்டுமின்றி பாலினை மாட்டின் மடியில் இருந்து கறக்காமல் விடுவதோ, கறந்த பாலினை கொள்முதல் செய்யாமல் இருப்பதோ, கொள்முதலுக்குப் பிறகு பாலினை பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்து முகவர்கள் மூலம் கடைகளுக்கு விநியோகம் செய்வது, அதன் பிறகு அதனை நுகர்வோருக்கு விற்பனை செய்வது என்கிற இந்த சங்கிலித் தொடர் எங்கே அறுந்து போனாலும் பாதிப்பு என்பது அனைவருக்குமானதாகவே இருக்கும்.

அதனால் தான் ஆவின் நிறுவனமானாலும் சரி அல்லது தனியார் பால் நிறுவனங்களானாலும் சரி தங்களிடம் பால் இருப்பு வைக்கும் திறன் மற்றும் விற்பனை அளவு இவைகளுக்கேற்றவாறு இது வரை ஆண்டு முழுவதும் தான் (365நாட்கள்) பாலினை கொள்முதல் செய்து வருகின்றன.

ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற, தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற விசயத்தை தற்போது தான் புதிதாக அமுல்படுத்த இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை பால்வளத்துறை அதிகாரிகள் உருவாக்கி அதனை அமைச்சரின் பெயரால் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இப்படித்தான் கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பால் பொருட்களையும், 10.00ரூபாய் பால் பாக்கெட்டையும் புதிய திட்டங்கள் போல முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் சட்டசபையிலேயே அறிவித்த நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றன.

தற்போது ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்படுகின்ற பாலிற்கு மேல் இன்னும் கூடுதலாக கொள்முதல் செய்து இருப்பு வைக்கவோ அல்லது பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவோ போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும், ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க பால் முகவர்களுக்கு உரிய கமிஷன் தொகை வழங்கப்படுவதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். 

உண்மை இவ்வாறாக இருக்க ஏற்கனவே பால்வளத்துறையில் நடைமுறையில் இருக்கின்ற விசயங்களை புதிது போல அறிவித்து மக்களையும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களை ஏமாற்றாமல் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல உற்பத்திக்கான தொழிற்சாலை மற்றும் பால் இருப்பு வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை தற்போதுள்ள நிலையில் இருந்து இரண்டு மடங்கு அதிகப்படுத்தி, பால் விற்பனையை அதிகரிக்க பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தி ஆக்கபூர்வமான செயல்பாடுகளை பால்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Milk agents demand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->