விளை நிலங்கள் வழியே சுடுகாட்டுக்குச் செல்லும் அவலம் - மநீம!
MNM Say About Thanjai Sudukadi issue
தஞ்சையில், சுடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லாததால் விளை நிலங்கள் வழியே உடல்களை தூக்கிச் செல்லும் அவலம். மயான வசதி ஏற்படுத்தித் தர மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெடார் ஆலக்குடி கிராமத்தில் யாராவது உயிரிழந்தால், அவரது உடலை மயானம் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லை.
விளை நிலங்கள் வழியே மயானத்துக்கு உடலைத் தூக்கிச் செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. இதனால், அறுவடை நேரத்தில் நெற்கதிர்கள் வீணாகின்றன.
சேறும், சகதியும் நிறைந்த பாதையில் உடலைத் தூக்கிச் செல்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அருகில் உள்ள வெட்டாற்றின் கரையிலேயே மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கிராம மக்களின் பல்லாண்டுகால கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.
மயானத்துக்கு சாலை அமைப்பதிலும் சிக்கல் நிலவுவதாகத் தெரிகிறது. எனவே, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, வெட்டாற்றின் கரையில் மயானம் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
MNM Say About Thanjai Sudukadi issue