நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.!
namakkal anjaneyar temple kumbabishegam
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2009-ம் ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்ததைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆஞ்சநேயர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்காக கடந்த சில மாதங்களாக ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்காக பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும், யாக சாலை பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
இந்தக் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என்று லட்சக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary
namakkal anjaneyar temple kumbabishegam