நேரு குடும்ப விசுவாசியாக தொடர முயற்சிக்கிறார் நாராயணசாமி...பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி.காட்டம்!  - Seithipunal
Seithipunal


நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் முறைகேடுகள் மெய் சிலிர்க்க வைக்கும் என்றும் அப்போது நாராயணசாமியின் ராஜவிசுவாசம்  என பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி.தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நேஷ்னல் ஹெரால்டு வழக்கு குறித்து இன்று நாட்டு மக்கள் பெரிய அளவில் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட ஏழு பேர் மீது டில்லி ஐகோர்ட்டில் அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்கின்றனர்.  மோடி அரசு நேரு குடும்பத்தை அழிக்க முயல்கிறது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.

அவர் நேரு குடும்ப விசுவாசியாக தொடர முயற்சிக்கிறார். ஆனால், நேரு குடும்பம் அவரை எப்போதோ அந்தப் பட்டியலில் இருந்து விடுவித்துவிட்டது.  மீண்டும் பட்டியலில் சேர அவர் எடுக்கும் முயற்சிகள் பலிக்கப் போவதில்லை. புதுச்சேரி அரசியலிலும் அவர் ஜொலிக்கப் போவதும் இல்லை.  

நேஷ்னல் ஹெரால்டு வழக்கு என்னவென்று அவருக்குத் தெரியும். அதில் சோனியா, ராகுல் முதலானவர்கள் தெரிந்தே எப்படி மோசடி செய்தார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் பிரதமர் மோடி அரசை குறை சொல்ல இதை ஒரு கருவியாக திரு. நாராயணசாமி பயன்படுத்தப் பார்க்கிறார்.

புதுச்சேரி மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் என்ற முறையில் அது குறித்துச் சொல்ல வேண்டியது எனது கடமை.1037 தியாகிகளின் பண முதலீட்டில் தொடங்கப்பட்டது ஏ.ஜெ.எல். நிறுவனம்.  கம்பனி சட்டப்படி இது ஒரு பொது நிறுவனம். நேரு 1937ல் இதை தொடங்கினார்.

நேஷ்னல் ஹெரால்டு, நவஜீவன் முதலான பத்திரிகைகள் இந்த நிறுவனம் மூலம் வெளிவந்தது.  மத்தியிலும், மாநிலங்களிலும் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுகள், இந்த பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை வாரிக் கொடுத்தது.அதில் கிடைத்த லாபத்தை வைத்து டில்லி, மும்பை, லக்னோ போன்ற பல இடங்களில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏஜெஎல் நிறுவனம் சொத்துகளை வாங்கி குவித்தது.

காலப்போக்கில் பத்திரிகை நொடிந்த நிலைக்குச் சென்றதால், இழுத்து மூடும் நிலைக்கு ஏஜெஎல் நிறுவனம் சென்றது. அப்போது காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்தது. அப்போதும் பத்திரிகை முன்னேற்றம் அடையவில்லை.

இந்த நிலையில்தான் ராகுல்காந்தி யங் இந்தியன் என்ற பத்திரிகை நிறுவனத்தை தொடங்குகிறார். இது ஒரு தனியார் நிறுவனம். ஏஜெஎல் பங்குதாரர்கள் அடங்கிய பொது நிறுவனம். 

பங்குதாரர்களைக் கேட்காமல் ஏஜெஎல் நிறுவன பங்குகள் மற்றும் சொத்துகளை சோனியாவும், ராகுலும் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்கின்றனர்.  ஒவ்வொருவருக்கும் தலா 38 சதவீத பங்குகள் உள்ளன.  மீதி 24 சதவீத பங்குகளை மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் வைத்திருந்தனர்
.
நேரு தொடங்கிய நிறுவனம் ஊத்தி மூடப்பட்டது. அதற்கு முதலீடு செய்ய பணம் கொடுத்த பங்குதாரர்கள் ராகுலிடம் கேள்வி கேட்டனர்.அந்த நேரம்பார்த்து சுப்ரமணியம் சாமி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி அமலாக்க துறை விசாரணையில் இறங்கி மோசடிகளைக் கண்டுபிடித்தது.

வழக்கை எதிர்த்து சோனியா, ராகுல் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். ஆனால் நீதியின் பக்கம் கோர்ட் நின்றது. அதனால் அமலாக்க துறை மீண்டும் விசாரணையில் இறங்கி இந்த வழக்கில் நேற்று முன்தினம் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

இதில் மோடி அரசு எங்கே வந்தது. இதில் மோடி அரசு நேரு குடும்பத்தை எப்படி பழி வாங்கியது.  கோர்ட் உத்தரவுப்படி அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.ஆங்கிலத்தில் வெளிவரும் பல பத்திரிகைகள் இதன் உண்மைத் தன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கின்றன.

சுமார் 441 கோடி ரூபாய் ராகுல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்.  பொது நிறுவனமான ஏஜெஎல் பங்குதாரர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.  அவர்கள் கொடுத்த பணத்தில் பத்திரிகைகள் பொருள் ஈட்டி சொத்துகள் வாங்கின. அதில் அவர்களுக்கு ஒரு பங்கும் கொடுக்காமல், அத்தனை சொத்துகள், பங்குகளையும் சோனியா, ராகுல் யங் இந்தியன் என்ற பத்திரிகை நிறுவனம் மூலம் ஸ்வாகா செய்திருக்கிறார்கள். வரும் 21ம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை வேகம் எடுக்கப் போகிறது.  முதல் குற்றவாளியாக சோனியாவும், 2வது குற்றவாளியாக ராகுலும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் இப்போது இவர்கள் இருவரும் ஜாமினில்தான் இருக்கின்றனர்.  விரைவில் கோர்ட் உத்தரவுப்படி மீண்டும் சிறைக்குச் செல்வார்கள். அப்போதும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாரதிய ஜனதாவையே குறை சொல்லிக்கொண்டு இருப்பார்.  சட்டம் படித்திருந்தும், ராஜ விசுவாசம் காரணமாக அவருக்கு உண்மை கண்ணை மறைக்கிறது.  நேரு குடும்பம் புறக்கணித்தாலும், நாராயணசாமியின் ராஜ விசுவாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது.  அவருக்கு வாழ்த்துகள் என செல்வகணபதி எம்.பி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narayanasamy trying to continue as Nehru family loyalist BJP leader Selvaganapathy MP Kattam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->