தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு டெல்லியில் இருந்து வந்த நோட்டீஸ்!
NCW issued a notice to DGP Sylendrababu
திமுக பேச்சாளர் சைதை சாதிக் சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆர்.கே நகரில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டு இழிவாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் திமுக நிர்வாகியான சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருந்தார்.
அண்ணாமலை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் "பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரகுவரன் ஆகியோரை இழிவாக பேசிய திமுக பேச்சாளர் சாதிக் பேசிய வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.
அதேபோன்று பாஜக மகளிர் அணியும் புகார் அளித்துள்ளது. பெண்களை இழிவாக பேசிய நபருக்கு சம்பவத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சாதிக்கின் பேச்சும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 509ன் படி குற்றமாகும்.
பெண்களை சொல், செயல், செய்கை என எந்த வகையில் இழிவு படுத்தினாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய குற்றமாக கருதப்படுகிறது. எனவே சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏழு நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்" என தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாஜக பெண் நிர்வாகி நடிகை குஷ்பு நேற்று முன்தினம் டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை சந்தித்து சைதை சாதிக் மீது புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
NCW issued a notice to DGP Sylendrababu