10 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார் : 2 பேர் பலி - 5 பேர் காயம்.!
near kanniyakumari two peoples died and five peoples injury for car accident
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை. இவர் மனைவி உலகம்மாள். இவர்களுக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம்பிள்ளை என்று மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்களில், பாலசுந்தரம்பிள்ளையின் மகள் உமாவை கடந்த வருடம் சுசீந்திரம் அருகே காக்கமூரில் உள்ள கண்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தற்போது இருவரும் மஸ்கட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் உமாவுக்கு இந்த வருடம் தலை பொங்கல் என்பதால் பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக உலகம்மாள் குடும்பத்தினர் நேற்று காலை பாத்திரங்கள், மளிகை சாமான்கள் மற்றும் கிழங்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களுடன் சொகுசு காரில் புறப்பட்டனர்.
அதில், உமாவின் தாய் சுபா, பாட்டி உலகம்மாள், நாகராஜனின் மனைவி பிரேமா, கோலப்பன் மனைவி சுப்புலெட்சுமி, உறவினரான அதே பகுதியை சேர்ந்த தளவாய்சுந்தரத்தின் மனைவி உமா, சுப்புலெட்சுமியின் பேத்தி சிபிக் ஷா உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்தக் கார் பூதப்பாண்டியில் இருந்து புறப்பட்டு, நாஞ்சில் புத்தனாறு கால்வாய் சாலை வழியாக தாழக்குடி நோக்கி செநின்றுகொண்டிருந்தது. இந்த பகுதியில் ஒருபக்கம் கால்வாய் மற்றும் மறுபக்கம் 10 அடி பள்ளத்தில் வயல்வெளி உள்ளது.
இதையடுத்து, அந்தக் கார் அந்த பகுதியில் இருந்த மதுபானக் கடையை கடந்து சென்றபோது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் பாய்ந்து, பலமுறை உருண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், உலகம்மாள் மற்றும் உமா உள்ளிட்டோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இருவரையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near kanniyakumari two peoples died and five peoples injury for car accident