ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு.!
No action should be taken against online rummy company High Court orders
ஆன்லைன் ரம்மி நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டதில் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகன், ஒன்றரை வயது மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரகுவரன் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்திடம் இந்த விளையாட்டு தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்ட போனஸ் சம்பாதித்த தொகை வருமான வரி பிடித்தம் பிடித்த விவரங்கள் ஆகியவற்றை வழங்கும்படி சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த 2 நோட்டீஸ்களும் ரத்து செய்யக்கோரி கேம்ஸ் 24*7 நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்தார். இதில் சிபிசிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார் 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் ஏராளமான ஆவணங்கள் உள்ளதால் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அதுவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது போன்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து அரசு தரப்பு பதில் அளிக்க மார்ச் 28ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிய நீதிபதி அதுவரை எந்தவித கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.
English Summary
No action should be taken against online rummy company High Court orders