பயங்கர தீ விபத்து: 7 ஆயிரம் கோழிகள் உடல் கருகி பலி!
Over 7,000 chickens killed in fire
தஞ்சை மாவட்டம் அருகே கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆயிரம் பிராய்லர் கோழிகள் கருகி உயிரிழந்தன.இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசிங்கம். விவசாயியான இவர் அங்குள்ள பர்மா காலனி என்ற இடத்தில் 2 இடங்களில் கொட்டகை அமைத்து அதில் இறைச்சிக்காக 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் இந்த கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி எரிந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்த தால் கோழிகள் இருந்த 2 கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது .மேலும் அதில் இருந்த 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன.உயிரிழந்த கோழிகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது. அப்போது சம்பவ இடத்துக்கு விரைத்து வந்த தீயணைப்பு வீரர்கள், கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தினர். கடைசியில் தீயில் கருகிய கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆயிரம் பிராய்லர் கோழிகள் கருகி உயிரிழந்த சம்பவம் ஒளிராமன்காடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Over 7,000 chickens killed in fire