பகுத்தறிவு, சமத்துவம் தான் திராவிடம் - ப. சிதம்பரம்.!
p sithambaram press meet about dravidam in karaikudi
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினத்தை சுதந்திர தினம் என்று கூறுவதை கண்டிக்கிறோம்.
அவரது பேச்சு சுதந்திர போராட்ட தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். வருகிற பட்ஜெட்டில் மத்திய அரசு பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் நுகர்வு, வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைகளில் உள்ள குறைகளை களைந்து மாற்றம் செய்ய வேண்டும்.
ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் சம்பளம், கூலி உயர்வு ஐந்து ஆண்டுகளாக தேக்கநிலையில் உள்ளது. அதனை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது உண்மையே. ஆனால் அதனை மோடி அரசு மறுத்து வருகிறது.
பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடம் என்பது ஆரியர் அல்லாத ஒரு இனத்தை குறிக்கிறது. திராவிடம் என்பது தமிழர்களின் விரிந்த பார்வையை காட்டுகிறது.
பகுத்தறிவு, சமத்துவம், அறிவார்ந்த சமுதாயம் ஆகியவையே திராவிடம் ஆகும். அரசியல் சட்ட விதிகளின்படியும் மரபுகளின் படியும் ஆளுநர் நடந்து கொள்வார் என நம்புகிறோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
p sithambaram press meet about dravidam in karaikudi