தமிழக அரசின் Fact Check அமைப்பை கலைக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Say TNGovt Fact Check
சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக உண்மை சரிபார்க்கும் மறைமுக தணிக்கையை திணிக்கும் விதிகள் செல்லாது என, மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் அலகை கலைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக உண்மை சரிபார்க்கும் குழுக்களை அரசு சார்பில் அமைக்க வகை செய்யும் விதத்தில், 2023-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், எதிர்க்கட்சிகளின் கருத்துகள் மீது மறைமுகத் தணிக்கையைத் திணிக்கக் கூடியது என்றும் கூறி அந்த திருத்தங்களை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மத்திய அரசின் கொள்கைகளை கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதற்கான இந்த நடவடிக்கையை மட்டும் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது.
எதிர்க்கட்சிகளின் கருத்துகளை திரித்து விமர்சிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உண்மை கண்டறியும் அலகை அமைத்து அதில் தங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை கொல்லைப்புற வழியாக பணியமர்த்தி லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை ஊதியமாக வாரி இறைக்கிறது. இதற்கு எழுந்த எதிர்ப்புகளை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை.
மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் அலகை தானாக முன்வந்து உடனடியாக கலைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Say TNGovt Fact Check