25 மாதம் ஆகிடுச்சு! சென்னையின் முக்கிய பிரச்சனை! தமிழக அரசின் அலட்சியம் அம்பலம்! அதிர்ச்சி அறிக்கை! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கரணை ஈரநிலத்தின் எல்லையை தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் உடனடியாக வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலக அளவில் சுற்றுச்சூழல் முக்கியத்தும் வாய்ந்த ராம்சர் ஈரநிலங்கள் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதன் எல்லைகள் மற்றும் தாக்கப்பகுதிகள் இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி  அளிப்பதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டு, 25 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் எல்லையை வரையறுப்பதில் செய்யப்படும் தாமதம் அரும் சொத்துகளை பாதுகாப்பதில் அரசின் அக்கறையின்மையை அம்பலப்படுத்துகிறது.

சென்னைக்கு இயற்கைக் கொடுத்த கொடைகளில் சிறப்பானது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆகும். சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் எவ்வளவு மழை பெய்து வெள்ளம் வந்தாலும் அதை உறிஞ்சி தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தி பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு உண்டு. சென்னையைப் பொறுத்தவரை அது ஒரு வரம். ஆனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் தங்களின் பேராசையால் அந்த வரத்தை சாபமாக்கி விட்டனர்.

அதிலிருந்து மீண்டு விடாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியை தமிழக அரசு மேம்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதில் அரசு தோல்வியடைந்து விட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி எதிர்கொண்டு வரும் பெரும் ஆபத்து ஆக்கிரமிப்பு தான். ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கிவிட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் எல்லைகளையும், தாக்கப்பகுதிகளையும் வரையறுத்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் தெரிவிக்க வேண்டியது அதை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஈரநிலங்கள் ஆணையத்தின் கடமையாகும்.

அவ்வாறு செய்வதன் மூலம் சென்னை பெருநகர இரண்டாவது பெருந்திட்டத்தில் (Second Master Plan) பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஈர நிலமாக பெருநகர வளர்ச்சிக் குழுமம் சேர்க்கும். அதன் மூலம் அங்கு எந்தவித கட்டுமானங்களும் அனுமதிக்கப்படாது என்பதால் சதுப்பு நிலத்தின் இயல்புகள் பாதுகாக்கப்படும்; ஏற்கனவே நிகழ்ந்த சீரழிவுகளும் சரி செய்யப்படும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளையும், தாக்கப்பகுதிகளையும் வரையறுத்து, அதில் அடங்கியுள்ள சர்வே எண்களை பட்டியலிடுவது கடினமான பணியல்ல. ஆனால், அதை செய்வதற்கு தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் ஓர் உள்நோக்கத்துடன் அக்கறை காட்டவில்லை என்பது தான் உண்மை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளும், தாக்கப்பகுதிகளும் வரையறுக்கப்பட்டு, இரண்டாவது பெருந்திட்டத்தில் சேர்க்கப்பட்டால், அப்பகுதியில் நிகழ்த்தப்படும் கட்டுமானங்களும், ஆக்கிரமிப்புகளும் இப்போதே தடுக்கப்பட்டு விடும். அதன் மூலம் இராம்சர் தலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், அதையொட்டியுள்ள தாக்கப்பகுதிகளும் பாதுகாக்கப்படும். இது தான் இன்றைய தேவை ஆகும்.

ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லை மற்றும் தாக்கப்பகுதிகளை மிகவும் தாமதமாக வரையறை செய்து அவற்றை 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு செயல்படுத்தப்படவிருக்கும் சென்னை மூன்றாவது பெருந்திட்டத்தில் சேர்க்கலாம்; அதுவரை தாக்கப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுவதாக தோன்றுகிறது. இது அரசின் கடமை தவறிய செயல் என்பது மட்டுமின்றி, ஈரநிலப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புக்கு அரசும், ஈரநிலங்கள் ஆணையமும் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஈர நிலங்கள் ஆணையத்தின் இந்தப் போக்குக்கு இன்னொரு சான்றையும் கூற முடியும். பெரும்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வரும் காசா கிராண்ட் என்ற தனியார் நிறுவனம் அதற்கான அணுகுசாலையை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கும் பெரும்பாக்கம் ஏரி பகுதியில் அமைத்து வருகிறது. இதற்கு எதிராக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டதற்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதன் எல்லைகளும், தாக்கப்பகுதிகளும் வரையறை செய்யப்பட்டு இரண்டாம் பெருந்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் இத்தகைய கட்டுமானங்கள் தடுக்கப்பட்டிருக்கும்.

இப்படியாகத் தான் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் இந்த அநீதியான செயல்களை அனுமதிக்க முடியாது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஈரநிலத் தகுதி எளிதில் கிடைத்துவிடவில்லை.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராம்சர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது பசுமைத் தாயகம் அமைப்பு தான்.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்; ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2003-ஆம் ஆண்டு பள்ளிக்கரணை முதல் சோழிங்கநல்லூர் வரை மிதிவண்டி பரப்புரை பயணம் மேற்கொண்டேன்.

அதன்பிறகும் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தேன். இதேபோல், பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும் அந்தப் பகுதியும், அதையொட்டிய தாக்கப் பகுதிகளும் தொடர்ந்து சூறையாடப்படுவதற்கு அரசே காரணமாகக் கூடாது.

இன்னொருபுறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தொடங்கி கிழக்குக் கடற்கரைச்சாலையில் முட்டுக்காடு தொடங்கி அண்மையில் தமிழ்நாட்டின் 18&ஆம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் வரையிலான பகுதிகளில் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.

ஆனால், அப்பகுதிகளில் கட்டுப்படுத்தப்படாத போக்குவரத்துக் காரணமாக மிகப்பெரிய அளவில் ஒலிமாசு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கிழக்குக்கடற்கரை சாலைப்பகுதிகளில் செயல்படும் முறைப்படுத்தப்படாத கேளிக்கை விடுதிகளில் இரவு முழுவதும் நடத்தப்படும் கொண்டாட்டங்கள், இரைச்சல் மிகுந்த இசைநிகழ்ச்சிகள் போன்றவை வெளிநாட்டு பறவைகளை அச்சுறுத்தி விரட்டுகின்றன.

இயற்கை நமக்கு கிடைத்தக் கொடை நாம் அலட்சியத்தாலும், அக்கறையின்மையாலும் அழித்து விட்டால் அந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. எனவே, பள்ளிக்கரணை ஈரநிலத்தின் எல்லையை தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் உடனடியாக வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும்.

அதேபோல், சென்னையில் தொடங்கி கழுவேலி வரையிலான பகுதியை பறவைகள் வாழிடமாக அறிவித்து, அங்கு வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Condemn to TNGovt Pallikaranai issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->