ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ், ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கையில், ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூக நீதிக்கு பெரும் பின்னடைவு. பட்டியலின மக்கள், மற்ற சமுதாய மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்  படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

முன்னதாக அன்புமணி ராமதாஸ் இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், "வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர்.  அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.

மருத்துவர் அய்யா அவர்களின் நண்பரான கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். 

பட்டியலின மக்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தொடக்க காலம் முதல் மேற்கொண்ட பணிகளை நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் சிலைகளை தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் திறந்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பதால் அவர் மீது தாம் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் பேசியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டியவர். வயதில் மிகவும் இளையவரான அவர், தமிழக அரசியலில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். தொடர்வண்டி தொழிற்சங்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் என்னுடன் ஒன்றாக கலந்து கொண்டவர். 

ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென ஒரு நாள் மாலைப் பொழுதில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss condolence to BSP Armstrong


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->