என்ன ஆச்சு? ஏன் இன்னும் அறிவிப்பு வெளியிடல? தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!
PMK Ramadoss Condemn ti TNGovt Mettur Dam issue
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை இன்று இரவு நிரம்பும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.97 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு, உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு அனுப்பி அவற்றை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2875 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனையிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், அணை நிரம்பிய பிறகு கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவது தான் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும். ஆனால், இந்தத் திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதால் அவ்வளவு தண்ணீர் கூட தேவைப்படாது. அணைக்கு வினாடிக்கு 2875 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதில் 2000 கன அடி நீரை 2 நாட்களுக்கு திறந்து விட்டாலே இப்போது இணைக்கப்பட்டுள்ள ஏரிகள் நிரம்பி விடும்.
மேட்டூர் அணையின் உபரி நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2008ஆம் ஆண்டு சேலத்தில் எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 50,000 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர்.
பாமகவின் வலியுறுத்தல் காரணமாகத் தான் இந்தத் திட்டம் ஓரளவாவது செயல்படுத்தப்பட்டது. அதன் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மேட்டூர் அணையின் உபரி நீர் ஏரிகளுக்கு திறக்கப்பட வேண்டும். எனவே, மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
உண்மையில் பா.ம.க. வலியுறுத்திய மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்குக் கொண்டுசென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டுசெல்வது ஆகும்.
இத்திட்டத்தால் நேரடியாக 30 ஆயிரத்து 154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இதைக் கருத்தில் கொண்டு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn ti TNGovt Mettur Dam issue