கஞ்சா ஏஜெண்டிகளாக மாணவர்கள் - பெரும் அவலம்! தமிழக அரசுக்கு எப்போது பொறுப்பு வரும்? டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடமிருந்த கஞ்சா போதைப் பழக்கம் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்ட நிலையில் அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும், போதைப் பொருட்களின் விற்பனைக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதனால் ஏற்படும் கேடுகள், சீரழிவுகள் குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். '

ஆனால், அதைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறையும், பொறுப்பும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இல்லாததால் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

கஞ்சா, போதைப் பாக்கு, அபின் போன்ற போதைப் பொருட்கள் தான் இதுவரை கிடைத்து வந்தன. அதுவும் கூட கஞ்சா புகைக்க வேண்டுமானால் குறைந்தது 30, 40 கி.மீ பயணித்து ரகசியமாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் தான் இருந்து வந்தது.

ஆனால், இப்போது கஞ்சா, அபின் மட்டுமின்றி கூல் லிப், எல்.எஸ்.டி ஸ்டாம்ப், ஆசிட் போன்ற போதைப்பொருட்கள் தெருக்கள்தோறும் தடையின்றி தாராளமாக கிடைக்கின்றன.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கூட, சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டும்; கடை உரிமையாளர் மனசாட்சியுடன் செயல்படுவர் என்றால், சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்க மாட்டார்;

அதுமட்டுமின்றி பெற்றோரிடம் புகார் செய்வார் என்பதால் சிறுவர்களுக்கு அச்சம் இருக்கும்; அதுவே அவர்களை புகையிலைப் பக்கத்தின் கூட திரும்ப விடாமல் தடுத்து விடும். ஆனால், இந்த இலக்கணங்களையெல்லாம் இன்றைய போதைக் கலாச்சாரம் தகர்த்து விட்டது.

கஞ்சா, அபின், ஆசிட், எல்.எஸ்.டி ஸ்டாம்ப், கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை வாங்க கடைகளுக்குக் கூட செல்லத் தேவையில்லை. தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கு அருகில் வந்து போதைப் பொருட்களை விற்கும் அளவுக்கு போதைப்பொருள் வணிகக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு சந்தைகளில் மட்டுமே கிடைத்து வந்த போதைப்பொருட்கள் கூட இப்போது குக்கிராமங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்களுக்கு போதைப்பொருட்க¬ளை விற்பனை செய்யும் போதை மருந்து விற்பனை கும்பல்கள், இப்போது மாணவர்களையே தங்களின் முகவர்களாக மாற்றியுள்ளனர்.

அதனால் போதை மருந்துகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் எந்த தடையுமின்றி மிகவும் எளிதாக வலம் வருகின்றன. அதன் விளைவாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 வயது சிறுவர்கள் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி அவற்றிலிருந்து மீள முடியாமல் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழக அரசும், காவல்துறையும் நினைத்தால் ஒரே வாரத்தில் கஞ்சா வணிகக் கட்டமைப்பை தகர்த்தெறிய முடியும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து கிராமங்களில் விற்பனை செய்யும் திமிங்கலங்கள் யார், யார்? என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால், அவர்களால் கிடைக்கும் வெகுமதிக்காக அவர்களை காவல்துறை கண்டுகொள்வதே இல்லை. பாமக சார்பில் அறிக்கை வெளியாகும் போது மட்டும் கஞ்சா வேட்டை 1.0, கஞ்சா வேட்டை 2.0 என நடத்தி பத்தாயிரம் பேரை கைது செய்வதும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அடுத்த சில நாட்களில் பிணையில் வெளிவந்து மீண்டும் கஞ்சா விற்பதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

காவல்துறையில் அதிகபட்சமாக 5 முதல் 10 விழுக்காட்டினர் மட்டும் தான் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுகின்றனர். ஆனால், காவல்துறையின் இதயம் 90% கெட்டு விட்ட நிலையில், மீதமுள்ளவர்களால் கஞ்சா உள்ளிட்ட போதை அரக்கனை கட்டுப்படுத்த முடியவில்லை.

கட்டற்ற கஞ்சா வணிகம் மற்றும் பயன்பாடு காரணமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன. பாலியல் குற்றங்களும் அதிகரித்து விட்டதால் தமிழ்நாட்டில் பெண்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை.

வருங்காலத் தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், கஞ்சா கட்டமைப்பை தகர்ப்பது தான் முதன்மைத் தேவை ஆகும். ஆனால், இதுகுறித்த புரிதல் தமிழக அரசுக்கு சற்றும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை நேரில் சந்தித்து போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா பயன்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இவை எதுவும் தமிழக அரசின் கேளாக் காதில் விழவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

தமிழ்நாட்டை கஞ்சா போதை எனும் பெரும் ஆபத்து சுற்றி வளைத்திருக்கும் நிலையில், காவல்துறையும், அரசும் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டை கஞ்சா போதை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Condemn to TNGovt MKStalin Ganja Drugs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->