உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது, துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு 
ஒப்புதல்:

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  10 சட்ட முன்வரைவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை ஆளுனர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க முடியாது; முதன்முதலில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்;  ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் முன்வரைவுகள் மீது ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை ஆளுனர்கள் அவர்கள் விருப்பம் போல கிடப்பில் போட்டு வைக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது; எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதிகபட்சமாக 4 மாதங்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. மிகவும் சிக்கலான, மாநில அரசுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆளுனர்கள்  நிறுத்தி வைக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் மாண்பு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

மாநில அரசுகள் சட்டம் இயற்றினால், அதன் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான மாணவர்கள்  பாதிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதும்,  அதனடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்காத நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று யோசனை வழங்கியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;  அதன் மூலம் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க  வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss SC judgement TNGovt University Chancellors State Autonomy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->