பொங்கல் பண்டிகை - பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்.! - Seithipunal
Seithipunal


வருகிற 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

"உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டும் இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.

இயற்கையையும், உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

political leaders pongal wish to peoples


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->