விவசாயிகளுக்கு தி.மு.க அரசு துரோகம் செய்து கொண்டிருக்கிறது..அண்ணாமலை காட்டம்!
The DMK government is betraying the farmers. Annamalai Kattam!
நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் திமுக துரோகம் செய்து கொண்டிருக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு என்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து, முதலமைச்சரும், அமைச்சர்களும், ஆளுக்கொரு சதவீதத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றனர் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை என பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம் என கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார் என்றும் திமுக தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி எண் 33 ஆக, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் திமுக துரோகம் செய்து கொண்டிருக்கிறது குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை என்றும் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வாங்கிய கடனை விவசாயிகள் குறித்த காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆணவமாகப் பேசினார் என்பதை சுட்டி காட்டியுள்ள அண்ணாமலை ,இத்தனைக்கும், கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலின்போதே, பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியிருந்தது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
The DMK government is betraying the farmers. Annamalai Kattam!