பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து விடுதலை..!
Popular YouTuber Chavku Shankar released from Puzhal jail
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து இன்று ஜாமினில் விடுதலையாகியுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் மீது அவதுாறு பரப்பியதாக கடந்தாண்டு தமிழகத்தின் வெவ்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் பதியப்பட்டன. அத்துடன், குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. ஒரு முறை குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. அவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக அளித்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சவுக்கு சங்கரை டிசம்பர் 24 இல் கைது செய்தனர்.
அத்துடன், அவரது ஜாமின் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஜனவரி 17ஆம் தேதியன்று ஜாமின் வழங்கியதுடன், போலீசாருக்கு கண்டனமும் தெரிவித்திருந்தார்.
அவரது தீர்ப்பில், 'ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க கருத்துக்கள் அடங்கியது. அவற்றில் உள்ளடக்கம் உள்ளவை மட்டுமே நிலைத்து நிற்கும். ஒரு கருத்து ஆதாரமற்றதாக இருந்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஒரு கருத்தை சொன்னதற்காக, ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறையாகும்.'வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோர்ட்டில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பித்தல் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான காரணங்களால், அவரது விடுதலை தாமதமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஜாமின் உத்தரவில் மாறுதல் செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 'இந்த உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், சிறை அதிகாரிகள் மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட நகலின் வருகைக்காக காத்திருக்க தேவையில்லை' என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இன்று மாலை சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Popular YouTuber Chavku Shankar released from Puzhal jail