கொசுக்களை ஒழிக்க பொது மக்களின் பங்களிப்பும் அவசியம்... புதுச்சேரி சுகாதாரத்துறை வேண்டுகோள்!
Public participation is also necessary to eradicate mosquitoes... Puducherry Health Department
புதுச்சேரி சுகாதாரத்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளால் வரும் காலங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்களை விரைவில் கட்டுப்படுத்தி விடலாம் என்று புதுச்சேரி நலவழித்துறை இயக்குனர் Dr. V. ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி நலவழித்துறை இயக்குனர் Dr. V. ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார்.அதில் கூறியிருப்பது:துணை நிலை ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரிலும், புதுச்சேரி முதல்வரின் வழிகாட்டுதலின் படியும் புதுச்சேரியில் கொசு தொல்லையினை கட்டுப்படுத்த அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகளுடன் புதுச்சேரியின் தலைமைச் செயலர் சிறப்பு கலந்தாய்வு 6/2/25 அன்று நடத்தினார். இதுவரை புதுச்சேரியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்தார்.
இச்சிறப்பு கூட்டத்தில் 2021 இல் இருந்து கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்றான மலேரியா காய்ச்சல் (உள்ளூரில் பரவக்கூடிய) நோயாளிகள் இல்லை என்பதையும், டெங்கு காய்ச்சல் 20 சதவீதம் குறைவாக உள்ளதை பற்றியும், 2024 ல் டெங்குவினால் இறப்பு இல்லை என்பதை பற்றியும், கொசுக்களை ஆராய்ந்த குழுவினர் கொடுத்த ஆய்வறிக்கையின் படி பைலேரியா மற்றும் மலேரியா நோய் கிருமி புதுச்சேரியில் உள்ள கொசுக்களில் காணப்படவில்லை என்றும், ஆனால் டெங்கு கிருமி இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது என்றும் தலைமைச் செயலருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கொசுக்களை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாக துறைக்கும் சுகாதாரத் துறைக்கும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 2024 மாதம் முதல் ஜனவரி 2025 வரை புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் 45000 வீடுகள் தோறும் 3 பேர் கொண்ட (DBC) குழு நியமிக்கப்பட்டு வீடுகளில் நன்னீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகும் பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆட்டுரல், இளநீர் குடுவைகள் போன்ற பொருட்களை அகற்றப்பட்டுள்ளன. புகை மருந்து அடித்தல் , வாய்க்கால்களில் கொசு புழுக்களை அழிக்க மருந்துகள் தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதோடு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள பைலேரியா ஆய்வாளர் கண்காணிப்பின் கீழ் பைலேரியா களப்பணியாளர்கள் வாய்க்கால்களில் மருந்து தெளித்தும் வருகின்றனர்.
மலேரியா அலுவலகத்தின் மூலமும் புகை மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி மற்றும் கொம்யூன் ஆணையர்களின் ஒத்துழைப்புடன் அந்த ஊழியர்களுடன் சேர்ந்தும் அந்த பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசு உற்பத்தியை தீவிரமாக கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்கனவே உரிய மருந்துகளுடன், புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் நகராட்சி மற்றும் கொம்யூன் களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. VCRC ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்தும் இலாசுப்பேட்டை பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதோடு DREAMS 24 திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர்.
ஊர்கள் தோறும் தெரு நாடகங்கள், ஆட்டோக்கள் ஒலிபெருக்கி மூலம் டெங்கு தடுப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. சினிமாகொட்டகைகள், கேபிள்தொலைக்காட்சிகள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு வழங்குதல் போன்றவைகளும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் அவர்களது இல்லங்களை தேவையற்ற தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதார ஊழியர்கள் வீடுகளை ஆய்வு செய்ததில் பல வீடுகளில் மேல் நிலை பிளாஸ்டிக் டேங்குகள் திறந்து உள்ளன. கீழ் நிலை தொட்டிகள் பல சரியாக மூடாமல் உள்ளன. கழிவறையில் இருந்து வெளியேறும் பைப்புகள் திறந்தே உள்ளன. வாய்க்கால்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஓடாமல் தேங்கி கொசு உற்பத்தி ஆக காரணம் ஆகின்றன என்பதால் அப்படிப்பட்ட குடியிருப்பின் மக்களே கொசு உற்பத்தியை குறைக்க தங்களை காக்க நீர்த்தேக்க தொட்டிகளை சரியாக மூடி வைக்கும் நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு தீவிரமான நடவடிக்கைகள் கொம்யூன் பஞ்சாயத்துடன் புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது.
புதுச்சேரி அரசு எடுக்கும் கொசுக்களால் உண்டாகும் நோய்களை தவிர்க்கும் நடவடிக்கைகளுக்கு மிக அவசியமான பொது மக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வழங்க கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்போடு புதுச்சேரி சுகாதாரத்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளால் வரும் காலங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்களை விரைவில் கட்டுப்படுத்தி விடலாம் என்று புதுச்சேரி நலவழித்துறை இயக்குனர் Dr. V. ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார்.
English Summary
Public participation is also necessary to eradicate mosquitoes... Puducherry Health Department