மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா - தமிழிசை உருக்கமான பதிவு.!!
tamilisai soundarrajan tweet about father died
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். இந்த நிலையில், தன் தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தர் ராஜன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை.. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார்.
குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு. தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார். எப்போதும் அவர் பெயர் நிலைத்திருக்கும் தமிழக அரசியலில். பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர். இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம். உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம்.
போய் வாருங்கள் அப்பா. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். நன்றி அப்பா. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilisai soundarrajan tweet about father died